ஆப்கானிஸ்தானில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், 10 ஊடகவியலாளர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 30, 2018 அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். காலை எட்டு மணி அளவில் அமெரிக்கத் தூதரகம் அருகில் பைக்கில் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, அங்கு ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அடுத்த 15 நிமிடங்களில், அந்த இடத்தில் பத்திரிகையாளர்களும் பத்திரிகைப் புகைப்படக்காரர்களும் குழுமினர்.
அப்போது கையில் கேமிராவுடன் பத்திரிகையாளர்போல் அந்த இடத்துக்கு வந்த தீவிரவாதி அதே இடத்தில் இன்னொரு வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில், ஒன்பது பத்திரிகையாளர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். இது தவிர, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கோஸ்ட் மாகாணத்தில் பிபிசி செய்தியாளர் அஹமத் ஷா சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு காந்தஹாரில் நேட்டோ வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அருகில் இருந்த மதப் பள்ளி ஒன்றின் 11 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மொத்தமாக 10 பத்திரிகையாளர்கள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இந்தத் தாக்குதல்களுக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.