பதவியைப் பறித்த பழி!


பதவியைப் பறித்த பழி!

அரசுப் பதவியான ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் பிராந்திய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கிறிஸ்டினா சிஃப்யுன்டஸ். இவர் ஸ்பெயினை ஆளும் பார்டிடோ பாபுலர் என்ற மைய - வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவர். இவர் மீது, இரண்டு போலி கையெழுத்துகளைப் பெற்று முதுகலைப் பட்டம் பெற்றார் என்ற சர்ச்சை எழுந்தது. எதிர்க்கட்சிகள் அவரைப் பதவி விலக வலியுறுத்தின. இந்நிலையில் கிறிஸ்டினா 2011-ல், ஒரு பல்பொருள் அங்காடியில் க்ரீம் ஒன்றைத் திருடுவதுபோன்ற வீடியோ பதிவு வெளியானது. தன் மீதான இந்தத் திருட்டுப் பழியை மறுத்துள்ளார் கிறிஸ்டினா. ஆனால், ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆளும் கட்சிக்கு மேலும் சங்கடத்தை உண்டாக்க விரும்பாமல்,  ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்!

விமானத்திலும் காதல் மலரலாம்!

விமான பயணத்தின் போது நமக்கு அடுத்த இருக்கையில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்கும் வசதி இருந்தால் எப்படி இருக்கும்? ரஷ்யாவின் மூன்றாவது பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான  ‘யு டையர்’ தனது மொபைல் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறது. அந்தச் செயலியில், சக பயணிகளின் பாலினம் தெரியவரும். அதற்கேற்றபடி பயணி தனது விமான இருக்கையைத் தேர்ந்தெடுக்கலாம். பயணத்தில் காதலரைத் தேர்ந்தெடுக்க உதவவே இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதாக வெளிப்படையாகவே ‘யு டையர்’ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

x