அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பம் என்ற பொதுவான இலக்கை அடைவதில், தென் கொரியாவும் வட கொரியாவும் உறுதிபூண்டுள்ளன.
அருகருகே இருந்தும் ஆயுதம் திரட்டி நின்ற வட கொரியாவும் தென் கொரியாவும் இப்போது அமைதிப் பாதைக்குத் திரும்பியிருக்கின்றன. இந்த இரு நாட்டின் தலைவர்களும், தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துக்கொண்டார்கள். எந்த அளவுக்கு இவர்களுக்கு இடையில் பகைமை உலவியதோ, அதற்கு நேர்மாறாக இந்தச் சந்திப்பில் இருவருக்குமிடையில் நட்புணர்வு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் தென் கொரிய அதிபர் மூன்ஜே-இன்னும் கைகுலுக்கிக்கொண்டார்கள், ஆரத்தழுவிக் கொண்டார்கள், ஒன்றாய் அமர்ந்து விருந்துண்டார்கள். இன்னும் என்ன வேண்டும்? ‘அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பம் என்ற பொதுவான இலக்கை அடைவதில் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன’ என்று இரு அதிபர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான 65 ஆண்டுகால பங்காளிச் சண்டை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ஏதோ இரண்டு குட்டி நாடுகள் அடித்துக் கொள்கின்றன என்று கருதிவிட முடியாது. எப்போது வட கொரியா, அணு ஆயுதத் தாக்குதலை நிகழ்த்துமோஎன்று அமெரிக்காவே நடுங்கிக்கொண்டிருந்தது.