தனி ஒருவனுக்கு இடமில்லை..!


சிரியாவைச் சேர்ந்த ஒருவர், தாய்நாடு திரும்பப் பயந்து 40 நாட்களாக கோலாலம்பூர் விமான நிலையத்தில் தங்கியிருக்கிறார்!

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘தி டெர்மினல்’ ஆங்கிலப் படத்தில், அமெரிக்க விமான நிலையத்தில் சிக்கிக்கொள்வார் நடிகர் டாம் ஹேங்க்ஸ். அதேபோல சிரியாவைச் சேர்ந்த ஹசன் அல் கொண்டர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார் கடந்த 40 நாட்களாக. அங்கே ஏர் ஏசியா விமான நிறுவனம் வழங்கும் அரிசிச் சோறையும் சிக்கனையும் உண்டு, உயிரைத் தக்க வைத்திருக்கிறார். அங்குள்ள சிறிய கழிப்பறையில் குளிக்கிறார். துணிகளைத் துவைத்துக்கொள்ளும் வசதி இல்லை. அவர் கையிலிருக்கும் பணமும் விரைவில் தீரப்போகிறது.

ஹசன் இங்கு வந்த கதை சோகமானது. 36 வயதான அவரை ராணுவத்தில் சேர நிர்பந்தித்தது சிரியா அரசு. இதையடுத்து 2006-ல், ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தப்பித்து வந்தார். அங்கு சந்தைப்படுத்துதல் துறையில் பணியாற்றினார். 2016-ல், அவரது பணி உரிமத்தை ரத்து செய்தது அமீரக அரசு. ஆனால், அவரால் தாய்நாடு திரும்ப முடியவில்லை. அரசின் கட்டளையை மறுத்து தப்பித்து வந்ததால், சிரியாவுக்குச் சென்றால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சமே காரணம்.

அமீரகத்தில் இருந்து கடந்த ஆண்டு அவர் மலேசியாவுக்கு மூன்று மாத விசாவில் அனுப்பப்பட்டார். அங்கிருந்து, சிரியா அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஈக்வடாருக்குச் செல்ல பணம் சேர்த்தார். ஆனால், ஈக்வடார் செல்லும் விமானத்துக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் சொல்லப்படவில்லை.

x