பிற்போக்குச் சட்டங்களால் தடைபடும் வளர்ச்சி!


வேலை பார்க்கவும், தொழில் தொடங்கவும் ஆண்களுக்கு எளிதாகவும் பெண்களுக்கு பல்வேறு சிக்கல்கள் நிறைந்த வழிமுறைகளும் பல வளராத, வளரும் நாடுகளில் பின்பற்றப்படுவதாக உலக வங்கியின் ஆய்வு கூறுகிறது.

‘ஈக்வடோரியல் கீனியா’ என்ற நாட்டில் பெண்கள் வேலை, கடன் அல்லது வீடு வாங்க கணவரின் கையெழுத்து அல்லது ஆண் உறவினரின் அனுமதியைப் பெற வேண்டும். ஆய்வு நடத்தப்பட்ட 189 நாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதற்கும் சுய தொழில் தொடங்குவதற்கும் இதுபோன்ற பிற்போக்குத்தனமான சட்டங்களும் விதிகளும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன .

பல நாடுகளில், பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் வேலை பார்க்கக் கூடாது என்ற சட்டங்கள் அமலில் உள்ளன. 104 நாடுகளில் பெண்கள் இரவில் வேலை பார்க்கவும், உற்பத்தி, கட்டுமானம், ஆற்றல், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றவும் தடை நிலவுகிறது. இதனால், உலகின் 270 கோடி பெண்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன.

இவற்றோடு, வீடுகளில் வன்முறையும் பணியிடங்களில் பாலியல் சீண்டல்களும்கூட அவர்களது வளர்ச்சியைத் தடுக்கின்றன. இவற்றுக்கெதிரான கடுமையான சட்டங்கள் நிலவும் நாடுகளில் சுய தொழிலில் வெற்றிபெறும் பெண்களின் விகிதம் அதிகரித்திருக்கிறது. இருந்தும் ஆப்கானிஸ்தான், மியான்மர், ரஷ்யா உள்ளிட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 45 நாடுகளில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லை. 59 நாடுகளில் பணியிடங்களில் பாலியல் சீண்டல்களைத் தடுக்க சட்டங்கள் இல்லை.

x