உலகமே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் இருவர் – அதிலும் எதிரெதிர் துருவங்கள் – அமைதி நோக்குடன் கை குலுக்கவிருக்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் முதல் முறையாகச் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டிருப்பது அமெரிக்கா, கொரியாவைத் தாண்டியும் முக்கியமான செய்தி ஆகியிருக்கிறது.
அணு ஆயுதச் சோதனை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால் சர்வதேச சமூகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது வட கொரியா. அதிலும் கிம் அதிபராகப் பொறுப்பேற்ற பின் எந்த நேரத்தில் எது நடக்குமோ எனும் பதற்றத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திவந்தார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் சூழல் இன்னும் மோசமானது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் மாறி மாறிப் போர் மிரட்டல்களை விடுத்து உலக அமைதியைக் கெடுத்தார்கள்.
இந்நிலையில் தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வட கொரியா முடிவெடுத்தது பலரின் புருவத்தையும் உயர்த்தியது. சமாதானத்தை நோக்கி அடியெடுத்துவைக்கும் வட கொரியாவின் ராஜதந்திர நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இதுவரை ஆறு முறை அணு ஆயுதச் சோதனைகள் நடத்தியிருக்கும் வட கொரியா, யாரும் எதிர்பாராத திருப்பமாக அணு ஆயுதப் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக அறிவித்தது அடுத்த அதிரடி. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று வட கொரிய அதிபர் கிம்மே நேரடியாக அறிவித்தது நிகழ்ந்துவரும் மாற்றங்களின் உச்சமானது.
பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ட்ரம்ப்பும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். மே மாதத்துக்குள் இந்தச் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றே முழுத் தீர்வையும் தந்துவிடும் என்றும் நம்பிவிட முடியாது. அணு ஆயுதப் பயன்பாட்டை நிறுத்திக்கொள்வதற்கு கிம் என்னென்ன நிபந்தனைகளை விதிக்கப்போகிறார் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. எல்லாவற்றையும் தாண்டி இது ஒரு நல்ல