அந்தரத்தில் சுழன்று அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் @ கேதார்நாத்


கேதார்நாத்: உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத் அருகே ஆறு யாத்ரீகர்கள் உட்பட 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிபேடுக்கு 100 மீட்டருக்கு முன்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. பைலட் உட்பட அனைத்து பயணிகளும் பத்திரமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தரத்தில் சுழன்ற ஹெலிகாப்டர்: இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிபேடில் தரையிறங்க வரும் ஹெலிகாப்டர் அந்த முயற்சியில் தோல்வியடைகிறது. என்றாலும் ஹெலிபேடுக்கு 100 மீட்டருக்கு முன்பாக விமானியின் சாமர்த்தியத்தால், திறந்த வெளியில் பத்திரமாக தரையிறங்கியது. தரையைத் தொடுவதற்கு முன்பாக அந்தரத்தில் அது சுழன்று தடுமாறி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்கிறது.

விரைந்து முடிவெடுத்த பைலட்: இதுகுறித்து ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் சவுரப் கஹர்வார் கூறுகையில், "வெள்ளிக்கிழமை காலை சிர்சி ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டரின் பின்பகுதி இயந்திரதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை அவசரமாக தரையிறக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஹெலிப்பேட்லிருந்து 100 மீட்டர் தள்ளி ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானி தனது அமைதியை இழக்காமல், உடனடியாக முடிவெடுத்து செயல்பட்டு பெரும் விபத்தினை தவிர்த்துள்ளார். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருந்தனர். பின்னர் கேதர்நாத் கோயிலுக்கு தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தச் சம்பவம் காலை 7 மணிக்கு நடந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

பதிவு செய்ய வலியுறுத்தல்: யாத்திரையின் தொடக்கத்திலேயே இமையமலையில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் அதிகரித்து இருக்கிறது. இதனால் கேதார்நாத், யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கங்கோத்ரி செல்லும் சர்தாம் பக்தர்கள் பிரச்சினைகளைத் தவிர்க்க பதிவு செய்து கொள்ளுமாறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் பயணம் மேற்கொள்ளுமாறும் உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் ராதா ரவுரி வியாழக்கிழமை தெரிவித்தார். குளிர்காலம் முடிந்து கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே யாத்ரீகர்கள் தங்களின் பயணத்தைத் தொடங்கி விட்டனர்.

x