புதுடெல்லி: உலக அளவில் பயன்பாட்டில் உள்ள டேட்டிங் செயலிகளில் ஒன்று Bumble. அண்மையில் பிரம்மச்சரியம் குறித்த அந்நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
Bumble செயலி கடந்த 2014-ல் அறிமுகமானது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கோடி பயனர்கள் இந்த செயலியை ஆக்டிவாக பயன்படுத்தி வரும் பயனர்களாக உள்ளனர். அதோடு, உலக அளவில் பிரபலமாக உள்ள டேட்டிங் செயலிகளில் ஒன்று.
இந்த சூழலில் கன்னியாஸ்திரிகள் மற்றும் பிரம்மச்சரியத்தை பின்பற்றி வரும் நபர்களை சாடும் வகையில் விளம்பரத்தை வெளியிட்டது அந்நிறுவனம். இது வீடியோ வடிவிலும் வெளியானது. இது பயனர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. அதோடு இது போன்ற செயலுக்கு பதிலாக பயனரின் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் வைக்கலாம் என சொல்லி இருந்தனர். பெரும்பாலானவர்கள் இந்த செயலியில் தாங்கள் எதிர்கொண்டு வரும் சங்கடங்களை பட்டியலிட்டு இருந்தனர்.
இந்நிலையில், நாங்கள் தவறு செய்து விட்டோம். மாடர்ன் டேட்டிங் சார்ந்த விவகாரத்தில் விரக்தி கொண்டவர்களை ஈர்க்கும் வகையில் ‘செலபசி’ (Celibacy) சார்ந்த விளம்பரத்தை வெளியிட்டோம். ஆனால், அது எதிர்மறையாக அமைந்துவிட்டது என அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் ஆண்களுடனான உரையாடலைத் தொடங்கவும், கட்டுப்படுத்துவதற்குமான அனுமதியை பெண் பயனர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி இருந்தது. ஆனால், அண்மையில் அந்த அம்சத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.