போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்புர் மாவட்டத்தில் உள்ள பஹதுர்புர் கிராமத்தில் நாய் ஒன்றின் மரணச் செய்தி ஒட்டு மொத்த கிரமாத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நாய் திடீரென இறந்து விட்டதாக அதன் உரிமையாளர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்புர் மாவட்டத்தில் உள்ள பஹதுர்புர் கிராமத்தில் கலு என்ற நாய் இருந்திருக்கிறது. அந்த நாய் அக்கிராமத்தில் உள்ள உமேலா குடும்பத்தினரால் எடுத்து வளர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக கலு அந்தக் குடும்பத்தின் உறுப்பினராகவே கிராமத்தில் வளர்ந்துள்ளது.
நாயின் மரணம் குறித்து அதன் உரிமையாளர் கண்ணீர் மல்க கூறுகையில், “ஒட்டுமொத்த கிராமமும் கலு மீது பற்று கொண்டு இருந்தது. அதனால் அதன் இழப்பு அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. யாரவது ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தால் அவர்களின் இழப்பு அவ்வளவு வேதனையைத் தராது. ஆனால் திடீரென இறந்து விட்டால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. கலு நோய்வாய்பட்டிருக்கவில்லை. திடீரென என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.
பஹதுர்புர் கிராமாவாசியான அங்கிதா என்பவர் கூறுகையில், “கலு எங்களைவிட்டு போய்விட்டது. நாங்கள் மிகவும் மோசமாக உணர்கிறோம். இதுவரை யாரையும் கடித்தது இல்லை. நாங்கள் எங்கள் குழந்தையைப் போல அவனைப் பார்த்தோம். அவனுக்கு பிஸ்கெட் ஊட்டுவோம்” என்றார். இதனிடையே கிராமத்தினர் கலுவுக்கு முழு இறுதிச்சடங்குகள் செய்து உடலை தகனம் செய்தனர். இந்த சம்பவம் பல்வேறு மக்களுக்கு வியப்பை அளித்துள்ளது.