அதிக நாள் வேலைக்கு வந்தால் அதிரடி பரிசுகள் - திருப்பூர் நிறுவன அறிவிப்பு வைரல்


திருப்பூரில் தையல் கலைஞர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அதிரடி பரிசு அறிவிப்புகள்

திருப்பூர்: ஆண்டு முழுவதும் பின்னலாடை நிறுவனத்தில் அதிக நாட்கள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் பின்னலாடை தொழிலை நம்பி நேரடியாக 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு பேர் இருந்தும், திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது. குறிப்பாக, தையல் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

பிச்சம்பாளையத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வித்தியாசமான ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டு முழுவதும் அதிக நாட்கள் வேலைக்கு வரும் தையல் கலைஞர்களுக்கு, கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிச்சம் பாளையத்தில் அமைந்துள்ள நிறுவனத்தை சேர்ந்த டி.மணிகண்டன் கூறும்போது, ‘‘தொழிலாளர் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, தற்போதைய சூழலில் வேலைக்கு வருபவர்களை தக்கவைக்க முடியவில்லை. குறிப்பாக, தையல்காரர்களை தக்கவைக்க போராடி வருகிறோம்.

ஏனென்றால், எங்களுடன் பணிபுரியும்போது, வேறு நிறுவனம் கூடுதலாக சிறிய தொகை கொடுத்தால், அருகில் உள்ள நிறுவனத்துக்கு சென்றுவிடுகிறார்கள். 2 நாட்களுக்கு ஒருமுறை நிறுவனங்களை மாற்றும் தையல் தொழிலாளர்கள் உண்டு. இது ஒரு நிறுவனத்தின் உற்பத்தி திறனை பாதிக்கும் என்று அவர்கள் நினைப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அதிக நாட்கள் வேலைக்கு வரும் தையல்காரர்களுக்கு பரிசுகளை அறிவித்துள்ளோம்.

எங்களின் அறிவிப்பை நோட்டீஸ்களாக திருப்பூரில் விநியோகித்துள்ளோம். அதை பார்த்து பல அழைப்புகள் வருகின்றன. இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். அதன்படி, முதல் பரிசாக ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அல்லது அலைபேசி, 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான டிவி, கட்டில், பீரோ, ஷோபா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கிரைண்டர், மிக்ஸி மற்றும் டைனிங் டேபிள் பொருட்கள் வழங்கப்படும்” என்றார்.

திருப்பூரை சேர்ந்த தொழிலாளர்கள் கூறும்போது, “திருப்பூரில் தையல்காரர்களுக்கு சம்பள ஒப்பந்தப்படி ஒரு ஷிப்டுக்கு ரூ.490 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் தொழிலாளர்களை தக்கவைக்க ஊதிய உயர்வு அளிக்கும். ஆனால், பெரும்பாலான தையல்காரர்கள் ஷிப்ட் முறையை விரும்புவதில்லை.

அவர்கள் பீஸ் ரேட்டை நாடுகிறார்கள். இதன் மூலமாக, தினமும் குறைந்தது ரூ.1000 சம்பாதிக்க முடியும். ஒரு பீஸுக்கான கட்டணம், ஆர்டர்களைப் பொறுத்து மாறுபடும். தையல்காரர்கள் ஒவ்வொரு நாளும் அதிக பீஸ் ரேட் வழங்கும் நிறுவனங்களைத் தேடுகிறார்கள். இதற்காக அவர்கள் நிரந்தர வேலை மற்றும் தொழிலாளர் நலன்கள் குறித்து கவலைப்படுவதில்லை” என்கின்றனர்.

தையல் கலைஞரான ஆர்.பிரபாகரன் கூறும்போது, "தினமும் பீஸ் ரேட் செய்து ரூ.1000-க்கு மேல் சம்பாதிக்க முடியும். பீஸ் ரேட்டுக்கு முன்னுரிமை அளிப்போம். அப்போதுதான், தற்போதைய சூழலில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியும்” என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறும்போது, "'திருப்பூரில் 30 சதவீத தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். வட இந்திய தொழிலாளர்களை நம்பி இருக்காமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், பெண்களுக்கு பயிற்சி அளிக்க அரசு உதவ வேண்டும்” என்றார்.

x