50 அடி ஆழ கிணற்றில் குஞ்சுகளுடன் விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர் @ கரூர்


உயிருடன் மீட்கப்பட்ட மயில் மற்றும் குஞ்சுகளுடன் தீயணைப்பு வீரர்கள்.

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே காட்டூரில் 50 அடி ஆழக் கிணற்றில் குஞ்சுகளுடன் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர் கயிறு மூலம் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டார்.

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே காட்டூரில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாயக் கிணறு உள்ளது. இப்பகுதியில் அதிகளவு மயில்கள் சுற்றித் திரிகின்றன. சனிக்கிழமை இரவு மயில் ஒன்று தனது 4 குஞ்சுகளுடன் கிணற்றினுள் மோட்டார் வைக்கும் பகுதியில் தவறி விழுந்துவிட்டது. இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மயில் குஞ்சுகளுடன் பாதுகாப்பாக இருந்தது. இரவு முழுவதும் மயில் கத்திக்கொண்டே இருந்துள்ளது.

இதுகுறித்து கிணற்று உரிமையாளர் இன்று (ஆக. 4) காலை கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களில் ஒருவர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மயில் மற்றும் குஞ்சுகளை பாலிதீன் சாக்கில் போட்டு கட்டி கயிறு மூலம் மேலே அனுப்பினார். அதனைத் தொடர்ந்து குஞ்சுகளுடன் மயில் பாதுகாப்பாக விடப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் கூறுகையில், " மயில் தனியாக விழுந்திருந்தால் பறந்து மேலே வந்திருக்கும். குஞ்சுகளுடன் விழுந்ததால் மேலே வராமம் கத்திக் கொண்டு இருந்துள்ளது. மேலும் தீயணைப்பு வீரர் குஞ்சுகள் மற்றும் மயிலை பிடித்தப்போதும் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு அளித்தது" என்றனர்.

x