கோழிக்கடைக்காரரிடம் சிக்கிய காகத்தை மீட்க ஒன்றுதிரண்ட காக்கைகள் - வைரலாகும் வீடியோ!


அம்பேத்கர் கோனசீமா: ஒரு காக்கையின் காலை கயிற்றால் கறிக்கடைக்காரர் கட்டி வைத்ததால், ஏராளமான காக்கைகள் அந்தக் கடைக்குப் படையெடுத்து வந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள தடிபாகா என்ற சந்தையில் தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் கோழிக்கறிக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு வந்த ஒரு காகத்தைப் பிடித்து அதன் கால்களை கயிற்றால் கோழிக்கறி கடைக்காரர் கட்டி வைத்துள்ளார். இதனால் அந்த காகம் பறக்க முடியாமல் கத்த ஆரம்பித்தது.

இந்த காகத்தின் சத்தத்தைக் கேட்ட மற்ற காகங்கள், தடிபாகா சந்தை பகுதியில் ஒன்று கூடியதுடன் கோழிக்கறிக்கடையை சுற்றி பறக்க ஆரம்பித்தன. அத்துடன் ஒரே குரலில் அந்த காகங்கள் கரைய ஆரம்பித்தன. இதனால் சந்தையில் கடை வைத்திருந்த வியாபாரிகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கோழிக்கறிக்கடைக்காரர் ஒரு காகத்தை கட்டி வைத்த காரணத்தால், அந்த காகத்தை விடக்கோரி மற்ற காகங்கள் வந்துள்ளதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

இதனால் கோழிக்கறிக்கடைக்காரரிடம் சென்று கட்டி வைத்த காகத்தை அவிழ்த்து விடச்சொன்னதுடன், அவரைக் கண்டித்தனர். அப்போது ஏராளமான காகங்கள் கூடி கரைய ஆரம்பித்தன. இதனால் தனது கடையில் கட்டி வைத்திருந்த காகத்தை கோழிக்கறிக் கடைக்காரர் அவிழ்த்து விட்டார். அந்த காகம் மற்ற காகங்களுடன் பறந்து சென்றது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவைக்கு ஆபத்து என்றவுடன் அனைத்து காகங்களும் ஒன்று சேர்ந்து கோழிக்கடைக்கு மேல் பறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x