தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - வீடியோ வைரல்


நவி மும்பை: ரயிலுக்காக காத்திருந்த பெண் ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்த போது ரயில் மோதி அவரது கால்கள் துண்டிக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் பேலாபூர் ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ரயிலுக்காக நேற்று காத்திருந்த போது திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதனால் அவரது இரண்டு கால்களையும் அவர் இழந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற பன்வெல் - தானே ரயிலை பேலாபூர் ரயில், பிளாட்பாரம் எண்-3-ல் பின்னோக்கி நகர்த்துமாறு உத்தரவிடப்பட்டது. இதன்பிறகு அந்தப் பெண்ணை தண்டவாளத்தில் இருந்து தூக்கி அருகில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நீலா தெரிவித்தார்.

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. கனமழையால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் உள்ளூர் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பேலாபூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த நேரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அந்தப் பெண் தண்டவாளத்தில் தவறி விழுந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

x