புதுடெல்லி: டெல்லியில் பெய்த கனமழையின்போது வெள்ளம் சூழ்ந்த சாலையில் சொகுசு கார் ஒன்று சிக்கித் தவிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இணைவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அபிஷேக் என்ற நபர், டோனியா விலாக்ஸ்97 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், டெல்லியின் மழைநீர் சூழ்ந்த சாலையில் ஒரு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் ஒன்று சிக்கித் தவித்தபடி நிற்கிறது. அதன் விளக்குகள் ஒளிர்வதை கண்டு கொஞ்சம் தயங்கினாலும் மற்ற வாகனங்கள் தண்ணீரை கிழித்தபடி ரோல்ஸ் ராய்ஸை அநாயசமாக கடந்து செல்கின்றன. இந்த வீடியோவுடன், ரோல்ஸ் ராய்ஸின் விவிஐபி பார்க்கிங் என்று தலைப்பிட்டுள்ளார்.
தண்ணீருக்கு நடுவில் சொகுசு கார் சிக்கியிருப்பதை தூரத்தில் தனது மாருதி சுஸுகி காரில் அமர்ந்த படி வீடியோ எடுத்திருக்கும் விலாகர், "இது என்ன கார் என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. இது டெல்லி வெள்ளநீர் சூழ்ந்த சாலையில் சிக்கிக்கொண்டது" என்று தெரிவித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோவுக்கு 75,500-க்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பலர் கருத்திட்டுள்ளனர். ஒரு பயனர் கூறுகையில், "சொகுசு கார்கள் அதன் விலை அதிகமான உதிரி பாகங்களைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட அளவைத் தாண்டி தண்ணீர் வரும்போது, வண்டி தானாக நின்றுவிடும் படி சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த விலையுயர்ந்த உதிரி பாகங்களை வாங்குவதற்கு பதில் நின்று விடலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், "பைய்யா வேகமாக வருகிறீர்களா நான் ட்ரிப்பை ரத்து செய்யவா" என்று தெரிவித்துள்ளார். இன்னுமொரு பயனர், 6000சிசி-யை அவரது தீப்பெட்டியுடன் ஒப்பிடுகிறார்" என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பயனர், "பணம் வீணானது" என்று கருத்திட்டுள்ளார். இன்னுமொருவர், "பயணம் ரத்து செய்யப்பட்டது. காரணம் வாகனம் நகரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் இருக்கும் சொகுசு கார், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்-டின் பழைய மாடல் கார். இது இந்தியாவில் 2009 - 2010 ஆரம்ப விலை ரூ.2.5 கோடிக்கு (எக்ஸ் ஷோரும்) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இது இரட்டை டர்போ 6.6 - லிட்டர் வி12 ஆல் இயக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 28-ம் தேதி சில மணி நேரத்தில் டெல்லி 228.1 மி.மீட்டர் மழை பெய்த அன்று இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் வெளியிட்டுள்ள நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பெருமழைக்கு தயாராகி வருகிறது.