ஆன்மாக்களுக்கு திருமணம்: விபத்தில் இறந்த இணையரின் விருப்பத்தை நிறைவேற்றிய குடும்பத்தினர்!


சமீபத்தில் கார் விபத்தில் இறந்த தங்களின் பிள்ளைகளுக்கு ‘கோஸ்ட் மேரேஜ்’ என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் ஆன்மாக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களின் திருமண ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளனர் மலேசிய குடும்பத்தினர்.

யாங் ஜிங்ஷான் (31), லீ எக்யுயிங் (32) ஆகிய இருவரும் மூன்று ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்தனர். விரைவில் திருமணம் செய்துகொள்ள எண்ணியிருந்த இருவரும் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். ஜிங்ஷான் ஜூன் 2-ம் தேதி தனது பிறந்தநாளை பாங்காங்கில் கொண்டாட நினைத்திருந்திருந்தார். அதற்கான பயணத்தின் போது தனது பெண்தோழியிடம் தனது திருமண விருப்பத்தை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், மே 24-ம் தேதி வடமேற்கு மலேசியாவிலுள்ள பேராக் என்ற இடத்தில் இருவரும் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் உயிர் பிழைக்கவில்லை. இந்தத் துயரச் சம்பவத்துக்கு பின்னர், இருவரது குடும்பத்தினரும் ஒன்று கூடி தங்களது பிள்ளைகளின் திருமண விருப்பத்தினை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அதற்காக மரித்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கையில் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வதற்கும் இருவருக்கும் ‘கோஸ்ட் மேரேஜ்’ எனப்படும் ஆன்மாக்காளுக்குத் திருமணம் நடத்தி வைத்தனர். கோஸ்ட் மேரேஜ் என்பது திருமணமாகாத இரண்டு ஆன்மாக்களுக்கு நடத்தி வைக்கப்படும் திருமணச் சடங்கினை குறிப்பதாகும்.

விபத்தில் இறந்துபோன யாங் ஜிங்ஷான், லீ எக்யுயிங் ஆகியோருக்கு மண்டபம் ஒன்றில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்வின் போது திருமணம் நடத்தி வைத்தனர். இந்த நிகழ்வின் போது இருவீட்டாரும் இணைந்து திருமண ஜோடியின் திருமணப் புகைப்படத்தினையும் உருவாக்கினர். மேலும் ஜிங்ஷானின் குடும்பத்தினர் அவர்களின் இரங்கல் செய்தியில் லீயினை தங்களின் மருமகளாக குறிப்பிட்டிருந்தனர்.

விருப்பங்கள் நிறைவேறாமல் மரணமடைந்து போனவர்கள் மரணத்துக்கு பின்னர் அமைதியடைய மாட்டார்கள் என்பது சீன பாரம்பரிய நம்பிக்கைகளில் ஒன்று.

"சீன கலாச்சாரத்தின் தாக்கத்தினால், வடகொரியா மற்றும் ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளிலும் கோஸ்ட் மேரேஜ் நடைமுறையில் உள்ளது" என்கிறார் ஹுயங் ஜிங்சுன் என்ற சீன நாட்டுப்புறவியல நிபுணர். அவர் மேலும் கூறுகையில், "இந்தச் சடங்குகள் தங்கள் பிரியமானவர்களை மரணத்தின் மூலம் இழந்தவர்களின் உணர்வுபூர்வமான தேவைகளை பூர்த்தி செய்கிறது" என்றார்.

x