‘ஜீரோ வேஸ்ட்’ திருமணம்: பெங்களூரு மணப்பெண் அசத்தல் முன்னெடுப்பும், வைரல் வீடியோவும்


தனது திருமணத்தை ஜீரோ வேஸ்ட் வெட்டிங் - ஆக (கழிவுகள் இல்லாத) முடித்த பெங்களூரு பெண் ஒருவர் இணையத்தை உற்சாகமூட்டி வருகிறார். தனது தாயின் உதவியுடன் அன்னை பூமியை நினைவுகூரும் வகையில் இந்த ஜீரோ வேஸ்ட் திருமணத்தை அப்பெண் நடத்தியிருக்கிறார்.

டாக்டர் பூர்வி பட் என்ற அந்த மணப்பெண் தனது திருமண நிகழ்வுகளின் சின்னச் சின்னத் தருணங்களை தனது இன்ட்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், "எனது குடும்பத்தாரின் உதவியினால்தான் எனது ஜீரோ வேஸ்ட் திருமணம் கனவு சாத்தியமானது" என்று தெரிவித்துள்ளார்.

அந்தத் திருமணத்தில் தம்பதிகள் தாலி கட்டிக்கொண்ட அமைக்கப்பட்டிருந்த சிறிய மண்டபத்தின் தூண்கள் கரும்புக் கட்டுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. உணவுகள் வாழை இலையில் பரிமாறப்பட்டது. திருமணம் நடந்த இடம் மா இலை மற்றும் தென்னை ஓலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தம்பதியினர் அணிந்திருந்த மாலைகள் பிளாஸ்டிக் பூக்கள் இல்லாமல் நிஜப் பூக்கள், பருத்தி நூல் கொண்டு கோக்கப்பட்டிருந்தது.

தனது வீடியோவில் டாக்டர் பூர்வி பட், "என்னுடைய திருமணம் ஜீரோ வேஸ்ட் திருமணமாக நடந்து முடிந்தது. வாருங்கள் நாங்கள் அதை எப்படிச் சாதித்தோம் என்று காட்டுகிறேன். எங்கள் திருமணம் நடந்த மண்டபம் கரும்புகளால் உருவாக்கப்பட்டிருந்தது. திருமண கொண்டாட்டத்துக்கு பின்னர் அவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

திருமணத்தில் சின்னதொரு பிளாஸ்டிக் கப்கள் கூட பயன்படுத்தப்படவில்லை. திருமணம் நடந்த இடத்தை அலங்கரிக்க மா இலை மற்றும் தென்னை ஓலைகளே பயன்படுத்தப்பட்டன. அவை வளர்வதற்கு குறைந்த அளவே தண்ணிரை எடுத்துக்கொள்கின்றன. எங்கள் திருமண மாலைகளும் இயற்கையான பூக்கள் கொண்டு பருத்தி நூலில் கோர்க்கப்பட்டிருந்தன.

திருமணத்தால் உண்டாகிய கழிவுகள் அனைத்தும் நிகழ்வு முடிந்ததும் ஒன்றாக சேகரிக்கப்பட்டு எங்களின் தோப்புக்கு உரமாக்கப்பட்டது. நாங்கள் வழங்கிய பரிசு பொருட்களை சணல் பையில் வழங்கினோம். விருந்தில் உணவு உண்டவர்கள் கை கழுவிய நீர் நேரடியாக மரங்களுக்குச் சென்று சேர்ந்தன.

எங்களின் சங்கமத்தை அன்னை பூமியுடன் இணைந்து கொண்டாட விரும்பினோம். நிறைவாக, திருமணம் முடிந்த இடம் அன்று மாலையில் களங்கமில்லாததாக இருந்தது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இவை அனைத்துக்கும் காரணமானவர் எனத் தனது தாயாரை பட் பாராட்டியிருக்கிறார். அவர் கூறுகையில், "இந்த அனைத்து முயற்சிகளுக்கும் பின்னால் எனது தாயார் தான் இருந்தார். இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளையும் அவர் சரியாக திட்டமிட்டு ஒருங்கிணைத்து நடத்தினார். எங்களின் சங்கமம் இந்த வகையில் நடந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "உங்கள் திருமணத்தை நடத்த ஆடம்பரமான திட்டம் மற்றும் அதிக பணம் தேவையில்லை. முடிந்ததைச் செய்யும் மனநிலை இருந்தால் போதும். இது உங்களுக்கு சில யோசனைகளை தந்திருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவை நிறைவு செய்துள்ளார்.

டாக்டர் பூர்வி பட்டின் வீடியோ சுமார் 7 லட்சம் பார்வைகளுடன் வைரலானது. இந்த வீடியோவை சமூக வலைதள வாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஒரு பயனர், நமது தாத்தா பாட்டி காலத்தில் இப்படிதான் திருமண நிகழ்வுகள் நடந்திருக்கும். மிகவும் அருமை. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். திருமண வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், "நான் என்னுடைய திருமணத்தை இப்படித்தான் நடத்த திட்டமிட்டுள்ளேன். நீங்கள் ஒரு ஐகான்" என்று த தெரிவித்துள்ளார். மூன்றாவது பயனர், "அந்த காலத்தில் திருமணங்கள் எல்லாம் இப்படித்தான் நடந்தன. அன்று பிளாஸ்டிக்கை பயன்படுத்த யாருக்கும் அவசியமில்லை. இன்றும் பிளாஸ்டிக் பேக் இல்லாமல் வாழ முடியும். கடைக்கு போகும் போது துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு பயனர், "இது மிகவும் உந்துதலாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் எல்லோரும் நமது சமூகத்தில் ஆளுமைகளாக வேண்டும். இந்தத் திருமணம் மிகவும் எளிமையானதாக தோன்றினாலும் இதனை நிகழ்த்திக்காட்ட அதிக திட்டமிடலும், முயற்சியும் வேண்டும். நான் இதை மிகவும் நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.