மும்பை விமான நிலையத்தில் ரீல்ஸுக்காக நடனம்: நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்


ரயில் நிலைய நடைமேடை, மெட்ரோ ரயில் போன்ற பொதுவெளிகளில் சுற்றியிருப்பவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் நடனமாடி ரீல்ஸ் எடுக்கும் புதிய கலாச்சாரம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அவசியமற்ற இத்தைகையப் போக்கு, பிறருக்கு கஷ்டத்தையும் அசவுகரியத்தையும் உருவாக்கிவிடுகின்றன.

ரயில், பேருந்து நிலையங்கள் என பரவியிருந்த இந்த பொதுவெளி நடனப் போக்கு இப்போது விமான நிலையம் வரை நீண்டிருக்கிறது. இதுகுறித்து, மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாய் நம்பப்படும் வீடியோ ஒன்று எக்ஸ் பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சல்வார் குர்தா அணிந்த பெண் ஒருவர், குருஷேத்ரா படத்தில் வரும் ‘ஆப் கா ஆனா’ என்ற பாடலுக்கு மிகையாக நடனமாடுகிறார். அப்பெண்ணின் நடனத்தை சிலர் ரசித்தாலும் பலர் அதனை அசவுகரியமாகவே உணர்கின்றனர். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நபர், "அந்த வைரஸ் ஏர்போர்ட்டையும் வந்தடைந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பல பயனர்கள் நடமாடிய அந்தப் பெண்ணை விமர்சித்திருப்பதுடன், அந்த பெண்மீது விமானநிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அவரைக் கேலி செய்திருந்தாலும், பலர் அதிகரித்து வரும் இந்தப் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

பயனர் ஒருவர், "மனிதாபிமானமும், நல்லொழுக்கமும் எங்கே போகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டாமவர், "இவர்களைப் போன்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் கொண்டு வர வேண்டும். இவர்கள் எல்லா இடங்களையும் சர்க்கஸ் கூடாரங்களாக்கி விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

முன்றாவது பயனர், "இதுபோன்ற கோமாளிகள் பொது இடத்தில் நடமாடுவதை மோடி தனது அடுத்த ஆட்சியில் தடைசெய்ய வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு நபர், "இதுபோன்ற விஷயங்கள் விமானநிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழாமல் இருப்பதை இந்திய விமான போக்குவரத்துத் துறை உறுதி செய்ய வேண்டும்.

மக்கள், அவர்களின் முக்கியமான அலுவல் சார்ந்தே விமான நிலையங்களுக்கு வருகிறார்கள். நேரம் போக்குவதற்கு அல்ல. இதை வீடியோவில் பார்ப்பதே உண்மையில் எரிச்சல் அளிப்பதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

x