சென்னை: நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதன் மூலம் தமிழர் பெருமையின் அடையாளம் இருட்டடிப்பு செய்வதில் இருந்து மீட்டவர் பிரதமர் மோடி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற, மக்களவையின் புதிய கட்டிடம் கடந்தாண்டுமே 28-ம் தேதி திறக்கப்பட்டது. இதையொட்டி, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை, மக்களவை கூட்ட அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். இவ்வாறு செங்கோல் நிறுவப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகைவெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியநாடாளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாண்டு நிறைவை தேசம்பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகார பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணியபூமியும் அதன் பிறப்பிடமான தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்பு பெருமைக்குரிய நாள்.
தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்டகாலமாக இருட்டடிப்பு செய்வதில் இருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலை நிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.