தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக இருப்பதால் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை திமுக நிறைவேற்றி வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
வேலூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, ”திமுக என்ற தீய சக்தியின் கூட்டணியை விரட்டத் தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் பலப்படுத்த வேண்டும். இதற்காக, அம்மாவின் தொண்டர்கள் எந்த கட்சியிலிருந்தாலும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும். இன்னும் மற்ற கட்சிகள் திமுக என்ற தீய சக்தியை முடிவுக்குக் கொண்டுவர வலுவான கூட்டணியை பாஜக அமைத்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தேவையான இடங்களைப் பெற்று கூட்டணியில் இடம் பெற்று திமுகவை விரட்டக் கட்சிகளை அனுசரித்துச் செல்வோம். திமுகவில் பெரும்பாலானவர்கள் பிக் பாஸ் மாதிரியும், எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுகிறார்கள். கருணாநிதி காலம் தொட்டுத் தொடர்ந்து வருகிறது. திமுகவினர் யாரையும் மதிப்பதில்லை குறிப்பாகப் பெண்களைச் சிலேடையாகத் தமிழ் புலமையை வைத்துப் பேசுவது எல்லோருக்கும் தெரியும். மறைந்த கருணாநிதி கடந்த காலத்தில் சட்டசபையில் எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்பதும் ஜெயலலிதாவை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதும் தெரியும்.
வரும் தேர்தலில் திமுகவுக்கு அனைத்து தாய்மார்களும் சரியான பாடம் புகட்டுவார்கள். சில நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் துறையைத் தாக்கும் சூழல் ஏற்படுவதால் என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்ய வேண்டும். சசிகலா, ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைப்பது குறித்து எப்போதும் அடுத்த கட்சி தலையிடாது. கடந்த மூன்று ஆண்டில் அண்ணாமலை திமுகவிற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்றைக்கும் எங்கள் அரசியல், ஜெயலலிதாவின் லட்சியம் கொள்கைகளை வைத்திருப்போம்.
திமுக ஆட்சியிலிருந்த போதெல்லாம் கச்சத்தீவு, காவிரி விவகாரம், நீட் விவகாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுத்தவர்கள். தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர்கள். மக்கள் இந்த ஆட்சியின் மீது கோபமாக இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக இருப்பதால் சட்டசபையில் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்” என்றார்.