புதுவை என்.ஆர்.காங் - பாஜக ஆட்சியின் ஊழலை மதிப்பிட காங்கிரஸ் குழு அமைப்பு


புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சி ஊழலை மதிப்பிட காங்கிரஸ் குழு அமைத்துள்ளது.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சி அமைந்த நாள் முதல் எதிர்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி மீதும், அமைச்சர்கள் மற்றும் அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மது ஆலைக்கு அனுமதி, ரெஸ்டோபார் அனுமதி, பத்திரப்பதிவு துறையில் ஊழல், பொதுப்பணித்துறையில் ஊழல் என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பட்டியலிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக குடியரசுத்தலைவரிடம் ஆதாரங்களுடன் புகார் செய்ய உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி வந்தார். ஆனால் எந்த புகாரும் அனுப்பவில்லை. இதனிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சியான காங்கிரஸ் பொய் புகார் கூறி வருகிறது. ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும் என ஆளும்கட்சி தரப்பில் பதிலடி தரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசின் ஊழல், தோல்விகளை மதிப்பிட காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், துணைத்தலைவராக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 22 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் ஆளுங்கட்சி ஊழலை மதிப்பீடு செய்து அறிக்கையாக வெளியிடவுள்ளனர்.

x