சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறினாரே என்று சொல்லி திருமாவளவன் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. நான் சொல்லாத, நினைத்துக் கூடப் பார்க்காத செய்தியை, கடந்த 4 நாட்களாக வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
எங்களுடைய குடும்பம் ஒரு திராவிடக் குடும்பம். எனது தந்தை இந்தி எதிர்ப்புப் போராட்டம், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். முன்னாள் முதல்வர் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டு, மாநகராட்சித் தேர்தலில் இடம் கொடுத்து, கவுன்சிலராக இருந்து, நிலைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். எம்ஜிஆர் காலத்திலும் பொறுப்புகள் வகித்துள்ளார். ப்படி ஒரு நீண்ட நெடிய திராவிட பாரம்பரியம் எங்களுடையது. தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம்.
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் சென்ற வரலாறு எங்களுடைய குடும்பத்துக்கும், எங்களுக்கும் கிடையாது. அதிமுக என்னை அடையாளம் காட்டியது. ஒரு அந்தஸ்தைக் கொடுத்தது. எனவே, என்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலே எங்களது பயணம் நிச்சயமாகத் தொடரும். எனவே, இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி அற்ப ஆசை கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.