திருப்பூர்: அதிமுக உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்று திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் கண்கலங்கியபடி பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் உட்பட பலர் பேசினார்கள்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் பேசும்போது ”இதற்கு முன்பு பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தபோது முஸ்லிம் சகோதரர்கள் வருத்தமடைந்து கட்சி வேலை செய்யமாட்டோம் என்றார்கள். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று என்ன செய்தது? மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வாக்குகளை மட்டும் திமுக அறுவடை செய்துகொள்கிறது’’ என்றார்.
திருப்பூர் மாநகராட்சி 44-வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் பேசும்போது, “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால், அதிமுக - பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இல்லையென்றால், கட்சி 4 மற்றும் 5 ஆக உடையும். என் உயிர் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு துணை நிற்பேன்.
பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி, இங்குள்ள நிலவரத்தை எடுத்துரைக்க வேண்டும். மேலும் ’அதிமுக முஸ்லிம்களுக்கு எப்போதும் துணை நிற்கும்’ என பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே கண் கலங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘இது என் ஆதங்கம். இதனைச் சொல்லாவிட்டால், கிளை செயலாளர்கள் பணி செய்யமாட்டார்கள்’ என்றார்.
அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, “பொதுச்செயலாளர் பழனிசாமி சொல்லும் கட்சியுடன் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் யாருக்கும் எவ்வித வருத்தமும் இல்லை. முன்னாள் எம்எல்ஏ., மற்றும் கவுன்சிலர் ஆகியோர் தங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் கடந்தகால அனுபவங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர். அதிமுக அனைவருக்குமான கட்சி. ஆனால், முஸ்லிம்களை திமுக ஏமாற்றுகிறது” என்றார்.