திருவாரூர்: நகராட்சியுடன் காட்டூர் இளவங்கார்குடி, தண்டலை, தேவர் கண்டநல்லூர், புலிவலம், கீழக்காவாத்துக்குடி, பெருந்தரக்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, மன்னார்குடி நகராட்சியுடனும் ஒரு சில ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏப்.1-ம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டதால், திருவாரூர் நகராட்சியோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை இல்லை என சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊராட்சி செயலாளர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, “தங்களது ஊராட்சி நகரப் பகுதியுடன் இணைக்கப் பட்டுவிட்டதால், 100 நாள் வேலை திட்டம் இனி கிடையாது, அதனால் யாரையும் 100 நாள் வேலைத் திட்ட பணிகளுக்கு அழைக்க வேண்டாம்” என தெரிவித்த ஆடியோ பதிவு, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து திருவாரூர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என போராடி வரும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சண்முக சுந்தரம் கூறியதாவது: நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வந்த போது, பேச்சு வார்த்தை நடத்தி, 100 நாள் வேலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். சம்பந்தப்பட்ட அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களிடம் விசாரித்த போது, 100 நாள் வேலைத் திட்டம் சம்பந்தப்பட்ட கிராமங்களில் நிறுத்தப்பட்டுவிட்டதை உறுதி செய்கின்றனர். எனவே, இதை கண்டித்து பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நாளை (ஏப்.15) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளோம் என தெரிவித்தனர்.