செங்கல்பட்டு: தீயணைப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் மலர் வளையம் வைத்து இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் மும்பை தீயணைப்புத் துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் அதில் பலியாகினர். இவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ஆண்டு தோறும் ஏப்., 14ல், பணியின் போது தன்னுயிர் இழந்த தீயணைப்பு வீரர்களை போற்றும் வகையில் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டம் உதவி அலுவலர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் தீயணைப்புப் பணியின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீத்தார் நினைவுத்தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் - என்ற தலைப்பின் கீழ் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள், கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் என்றும் மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.