திமுக கூட்டணி கட்சிகளுக்கு பயம் வந்து விட்டதால் அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சிக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசி அருகே பள்ளபட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: அமலாக்கத் துறை சோதனைக்குப் பயந்து காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தது திமுக. ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமாக காங்கிரஸோடு திமுக வைத்துள்ளது தான் ஒப்பாத கூட்டணி. எந்தக் காலத்திலும் திமுக-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்ன வைகோ வைத்துள்ளது தான் சந்தர்ப்ப வாத கூட்டணி.
தமிழக உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லோரிடத்திலும் கலந்துபேசி இந்தக் கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். அதிமுகவோடு நெருக்கமாக இருப்பவர் தான் தலைவராக வந்துள்ளார். நெருக்கமாக இருந்தால்தான் கூட்டணி வலுவாக இருக்கும். திமுக அமைச்சர்கள் பெண்களைத் தவறாகப் பேசுகிறார்கள்.
சைவ, வைணவ மதத்தை அமைச்சர் பொன் முடி தவறாகப் பேசுகிறார். தவெக களத்திலேயே கிடையாது களத்தில் நிற்பது நாங்கள் தான். சிறுபான் மையினர் ஓட்டுகள் அதிமுகவுக்கு விழும். திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பயம் வந்து விட்டதால் அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சிக்கின்றனர். அதிமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும். எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் இனி நிகழும், இவ்வாறு அவர் பேசினார்.