புதுச்சேரி: தமிழ்புத்தாண்டையொட்டி புதுச்சேரி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழ் குரோதி ஆண்டு நிறைவடைந்து விசுவாசுவ ஆண்டு பிறந்தது. தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுவை கோயில்களில் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கபபட்டது. காலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு வைர கிரீடமும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தயிர்சாதம், பழங்கள் ஆகியவை பிரசாதங்களாக தொடர்ந்து வழங்க ப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தங்கத்தேரும் இழுத்து வழிபட்டனர். இதேபோல் புதுவை காந்தி வீதியில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயில், ரயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர் கோயில், சின்ன சுப்புராயப்பிள்ளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில்கள் உள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இதேபோல் புதுவை முத்தியால்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் தமிழ் வருடப்பிறப்பை யொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய வருடத்திற்கான பஞ்சாங்கத்தின் பொது பலனை கோவில் பட்டாச்சாரியார் பக்தர்களுக்கு வாசித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் உள்ள நவ நரசிம்மர் மற்றும் பானக நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. புத்தாண்டு அன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது விஷேசம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.