புதுச்சேரி: இலவச மனைப்பட்டா மக்கள் கோரியதையடுத்து 2 மாதத்துக்குள் தர நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கைலாஷ்நாதன் உறுதி தந்தார்.
அம்பேத்கர் பிறந்த நாளில் ஆதிதிராவிடர் மக்களிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று கலந்துரையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் செலுத்தி நலத்திட்ட உதவி தந்தார். அதன்பிறகு டி.என்.பாளையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக இலவச மனைபட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டும், அதற்காக மனை பிரித்த நிலையில் இதுவரை வழங்கபடவில்லை. இதனால் பலர் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் அபிஷேகபாக்கம் - டி.என்.பாளையம் ரோட்டில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் சாலை ஓரத்தில் மது பிரியர்கள் அட்டகாசம் அரங்கேறி வருகிறது.
சாலை வசதி சரியாக இல்லை. இப்பகுதி மக்கள் சுபநிகழ்ச்சிகள் நடத்த பல கிலோமீட்டர் தொலைவு சென்று நடத்த வேண்டி இருப்பதால் இந்த பகுதியில் திருமண மண்டபம் அரசு சார்பில் அமைத்து தர வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதையடுத்து ஆளுநர் கைலாஷ்நாதன் பேசுகையில், கிராம மக்களின் கோரிக்கைகளை செய்து தருகிறோம். தங்கள் பகுதிக்கு 2 மாதத்திற்குள் இலவச மனைபட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.