தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாத விஜய்; வாழ்த்திய கமல் - பின்னணி என்ன?


சென்னை: தவெக தலைவர் விஜய் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாமல் தவிர்த்துள்ளார். அதே நேரத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எப்போதும் தமிழ்ப் புத்தாண்டு எப்போது என்ற சர்ச்சை நிலவி வருகிறது. தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று, கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 2011இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தமிழ்ப்புத்தாண்டாக தை முதல்நாளை கொண்டாடி வருகின்றன. அதேபோல அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்திரை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றன.

இந்த ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு.

உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்

x