சேலம் அறிவுசார் மையத்தில் ஓராண்டில் 30-க்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் வெற்றி!


படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: அய்யந்திரு மாளிகை அறிவுசார் மையத்தைப் பயன்படுத்தி, கடந்த ஓராண்டில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர், என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

சேலம் மரவனேரியில், தாட்கோ மூலமாக ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் 180 கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் ஆதி திராவிடர் நலக்கல்லூரி மாணவர் விடுதி, சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையம் ஆகியவற்றை, ஆட்சியர் பிருந்தா தேவி முன்னிலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளு க்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 76,929 பேருக்கு ரூ.6.74 கோடி கல்வி உதவித்தொகை, 13,333 மாணவர்களுக்கு ரூ.6.31 கோடி மதிப்பில் விலையில்லா மிதி வண்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 90,390 பயனாளிகளுக்கு ரூ.13.91 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விடுதிகளில் ரூ.88.85 லட்சததில் 90 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தை கடந்த மார்ச் மாதம் மட்டும் 3,500 மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் இம்மையத்தைப் பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பணிபுரிகின்றனர், என்றார்.

ஆய்வின் போது, தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமா ராணி, மாநகராட்சி செயற்பொறியாளர் செந்தில் குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

x