ராமேசுவரம்-கோவை தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை


ராமநாதபுரம்: மீட்டர் கேஜ் பாதையின் போது இயக்கப்பட்ட ராமேசுவரம் - கோயம்புத்தூர் தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கும், அதில் இணைப்பு ரயிலாக பாலக்காடு பகுதிக்கும் மீட்டர்கேஜ் ரயில் பாதை இருந்தபோது தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்தது. அகல ரயில்பாதை பணிகள் தொடங்கியதும் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்து 2007-ல் அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் கோயம்புத்தூர் - ராமேசுவரம் தினசரி ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. அந்த ரயில் இன்று வரை இயக்கப்படவில்லை. இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டது.

இதன் தூரம் 392 கி.மீ. தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கையை அடுத்து, ஒரு விரைவு ரயில் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவைக்கு 510 கி.மீ தூரம் சுற்றி வாராந்திர ரயிலாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொள்ளாச்சி வழியாக இயக்கினால் 118 கி.மீ குறையும். பொள்ளாச்சி மார்க்கமாக ராமேசுவரத்திலிருந்து கோவைக்கு ரயில் இயக்கப்படுமானால் பழநி, ராமேசுவரம் ஆன்மிக தலங்களுக்கு செல்ல ஏதுவாக அமையும்.

மேலும் கடல் உணவுகளை கொங்கு மண்டலத்துக்கு கொண்டு செல்ல வசதியாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் மில்களிலும், பனியன் நிறுவனங்களிலும் பணியற்றி வருகின்றனர். இவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஜவுளி வர்த்தகத்துக்கும் வசதியாக இருக்கும்.

ஏப்.6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாமல் இருந்த ராமேசுவரத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த தருணத்தில் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ராமேசுவரம்-கோவை-பாலக்காடு ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி மார்க்கமாக கோவை-ராமேசுவரம் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

இது குறித்து ராமேசுவரம் பிராந்திய ரயில் பயணாளர்கள் சங்க நிர்வாகி சகாய வினோத் கூறுகையில், ராமநாதபுரம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக ராமேசுவரம்-கோயம்புத்தூர் தினசரி ரயில் உள்ளது. கடந்த மாதம் சேலம் கோட்டம் சார்பில் ஈரோடு-ராமேசுவரம் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். எனவே இந்த ரயிலை ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

x