சதுரகிரியில் அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அலுவலகம் அமைக்கப்படுமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு


சதுரகிரியில் தினசரி மலையேறி சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அலுவலகம் அமைக்க 2 மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சாப்டூரில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் சதுரகிரி மலையில் உள்ள 75.76 ஏக்கர் நிலம் கோயிலுக்கு சொந்தமானது ஆகும். சதுரகிரி செல்வதற்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தாணிப் பாறையில் இருந்து மாங்கனி ஓடை, வழுக்குப் பாறை, சங்கிலி பாறை, பச்சரிசி பாறை, சின்ன பசுக்கிடை, பிலாவடி கருப்பாமி கோயில் வழியாக 5.5 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோயில் மதுரை மாவட்டத்திலும், நுழைவு வாயில் விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளதால், வனத்துறை நுழைவு வாயிலுக்கு உள்ளே வருவாய், போலீஸ், சுகாதாரம், ஊராட்சி என மதுரை மாவட்டத்தை சேர்ந்த அலுவலர்களும், நுழைவு வாயிலுக்கு வெளியே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்களும் பக்தர்களுக்கான வசதிகளை செய்து வருகின்றனர்.

இதனால் தாணிப்பாறை நுழைவு வாயிலுக்கு உள்ளே ஏதாவது பிரச்சினை என்றால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதேபோல் வனப்பகுதியில் ஏதாவது நடந்தால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். சாப்டூர் வனச்சரகம், ஶ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வருவதால் சதுரகிரி விழாக் காலங்களில் வனத்துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சதுரகிரி மலையேறும்போது எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் இறந்தவரின் உடலை 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் வத்திராயிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் 60 கி.மீ. தூரத்தில் இருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். சாப்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர். இதனால் பக்தர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

சில ஆண்டுகளாக சதுரகிரி செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதத்துக்கு 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏப்ரல் 3-ம் தேதி முதல் மீண்டும் தினசரி வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 6 முதல் 10 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் மதுரையில் இருந்து மருத்துவக் குழுவினர் வருவதற்கு 9 மணிக்கு மேல் ஆகிறது. அதற்குள் 80 சதவீத பக்தர்கள் மலையேறிச் சென்று விடுவர். மேலும் மருத்துவக் குழுவினர் அடிவாரத்தில் மட்டுமே இருப்பதால், மலையேறும் போது ஏதாவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் பக்தர்களுக்கு உடனடியாக எந்த உதவியும் கிடைப்பதில்லை.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மதுரை, விருதுநகர் மாவட்ட வருவாய், காவல், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அலுவலகம் அமைப்பதற்கு இரு மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x