கோவை: நாங்கெல்லாம் ஒரு காலத்தில் அப்படி இருந்தோம். இப்போது திருந்திவிட்டோம். எனக்கு எதிரியே இல்லை. நான் கோவை சென்று 13 வருடம் ஆகிவிட்டது என மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்
மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காக பயங்கர ஆயுதங்களுடன் வருவதால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைபட்டால், வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க வேண்டும் என கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின .
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ரவுடி வரிச்சியூர் செல்வம், “நான் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறேன். கோவைக்கு வந்து 13 வருடம் ஆகிவிட்டது. என்னை விமல் எனும் காவல்துறை அதிகாரி தான் ஃபாலோ செய்கிறார். நான் எங்கே போனாலும் அவருக்கு லொகேஷன் அனுப்பிருவேன் . மதுரையை விட்டு எங்கே வெளியே போனாலும் லோகேஷன் அனுப்பி விடுவேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். நான் நல்லபடியாக வாழ்ந்து வருகிறேன்.
இன்று தவறான செய்தி உலா வருகிறது. எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்டுவிடுங்கள். நானே சொல்லிவிடுகிறேன். இன்று கூட எனது தலைமையில் ஒரு விழா. ஆனால், அந்த விழாவிற்கு என்னால் போக முடியவில்லை. தினமும் ஏதேனும் ஒரு விழாவுக்கு செல்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 கல்யாணத்திற்கு தாலி எடுத்து கொடுத்திருக்கிறேன். நான் இப்போது எந்த பிரச்சினைக்கும் போகவில்லை. நான் கோவை சென்று 13 வருடம் ஆகிவிட்டது.
சேட்டை செய்தால் போலீஸார் சுட தான் செய்வார்கள். திருந்தினால் விட்டுவிடுவார்கள். நல்லவர்களை சுட்டால் கேள்வி கேட்கலாம். போலீஸ் சுடுவது எல்லாம் ரவுடி, திருடர்களைத்தான்
நாங்கெல்லாம் ஒரு காலத்தில் அப்படி இருந்தோம். இப்போது திருந்திவிட்டோம். எனக்கு எதிரியே இல்லை. நாங்கள் திருந்திட்டோம். இறுதியாக 2018-ல் மதுரை உள்ளே ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் வழக்கு விழுந்தது. அதற்கு முன்னர் 2015-ல் ஒரு வழக்கு அவ்வளவு தான். என் வீட்டை சுற்றி கேமரா இருக்கு. நான் எங்கே போகிறேன், என்ன செய்கிறேன் என்பது எல்லாமே ரெக்கார்ட் ஆகுது” என விளக்கம் அளித்துள்ளார் வரிச்சியூர் செல்வம்.