தூத்துக்குடி: கார் பழுது நீக்குவதற்காக செலுத்தப்பட்ட தொகை மற்றும் சேவை குறைபாட்டுக்கு ரூ.2.80 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையைச் சேர்ந்தவர் தங்க இசக்கி பெருமாள். இவரது கார் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்தது. தூத்துக்குடியில் உள்ள கார் விற்பனை நிறுவனத்திடம் காரை பழுது பார்க்க அனுப்பியுள்ளார். அதோடு காப்பீடு நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித் துள்ளார். ஆனால், காப்பீடு நிறுவனம் பாதிக்கப்பட்ட காரை மதிப்பீடு செய்ய அளவீட்டாளரை அனுப்பவில்லை.
இதற்கிடையே, பழுது நீக்குவதற்கான தொகையை தங்க இசக்கி பெருமாள் செலுத்தி விட்டு, காப்பீடு நிறுவனத்திடம் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து ள்ளார். ஆனால், காப்பீட்டு நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான. தங்க இசக்கி பெருமாள், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். காரை பழுது நீக்குவதற்காக ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகையான ரூ.2,45,082 மற்றும் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என, மொத்தம் 2,80,082 ரூபாயை 2 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.