திருவண்ணாமலை: அரசு பேருந்தும், காரும் இன்றுஅதிகாலை நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோமாசிப்பாடி அருகே காட்டுக்குளம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து வந்த அரசு பேருந்தும், பெங்களூருவில் இருந்து வந்த காரும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் உயிரிழந்த 4 பேரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்களது விவரங்களை சேகரித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரும் புதுச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார்(52), சைலேஷ்குமார்(38), ஸ்டாலின்(42), சரோப்(47) ஆகியோர் என்பதும், 4 பேரும் லாரி உரிமையாளர்கள் என்பதும், தொழில் ரீதியாக பெங்களூரு சென்றுவிட்டு புதுச்சேரிக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்க செயலாளராக ஸ்டாலின் இருந்துள்ளார். கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.