பாஜக - அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி: செல்வப்பெருந்தகை விமர்சனம்


பாஜக - அதிமுக கூட்டணி அப்பட்டமான சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்கு பிறகும், பாஜக - அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி குறித்து அறிவித்தாரே தவிர, வேறு எந்த விவரமும் வெளியிடவில்லை. பாஜக - அதிமுக கூட்டணி அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கையற்ற கூட்டணி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

பாஜகவின் செயல் திட்டங்களில் பலவற்றை அதிமுக ஏற்கப் போகிறதா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக விரோத பாஜக அரசின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2013 முதல் 2024 வரை கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இண்டியா கூட்டணி என்பது தமிழக நலன் சார்ந்த கொள்கை கூட்டணி. இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருமித்த குரலில் செயல்பட்டு வருகிறது. எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி. அதேநேரத்தில், அரசியல் சுயநலத்தின் அடிப்படையில் அதிமுக , இன்றைக்கு பாஜகவிடம் சரணடைந்து அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் படுதோல்வியடைய செய்து நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x