ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்தலாம்: டிடிவி தினகரன் நம்பிக்கை


வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் சுயநலத்தைவிட்டு அனைவரும் ஓரணியில் செயல்பட்டால் திமுகவை வீழ்த்தலாம் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக-வை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். தமிழகம் என்று வரும்போது, அதிமுக தான் தலைமை ஏற்கும் என கூறியிருக்கிறார்கள். அதில் என்ன பிரச்சினை இருக்க போகிறது. அமமுக மோடியின் அணியில் இருக்கிறது.

2026-ல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமமுக செயல்படுகிறது. அதிமுக தரப்பில் இருந்து எங்களிடம் யாரும் பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், அங்கம் வகிக்க போகும் கட்சிகள் சுயநலத்தை விட்டுவிட்டு செயல்பட்டால் திமுகவை உறுதியாக வீழ்த்த முடியும். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தனிமைப்படுத்தபட மாட்டார்.

ஒருங்கிணைந்த அதிமுக என்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு சிலருக்கு பரந்த மனப்பாண்மை இல்லை. ஒருசிலரின் சுயநலம், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி வருவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த முறை அதே தவறு நடக்காமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் சரியாக கையாளுவார்கள் என நம்புகிறேன். 2026-ல் மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்தி விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

x