சாலை விபத்தில் மூளைச் சாவு: விருதுநகர் கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்


விருதுநகர்: அருப்புக்கோட்டையில் விபத்தில் காயமைந்து மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (58), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 10-ம் தேதி விருதுநகர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் பின்பக்க தலையில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இந்தநிலையில் மூளைச் சாவு அடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர் அவரது உடல்உறுப்புகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க முன்வந்தனர். அதைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினரால் மாரிமுத்து உடல் உள்ளுறுப்புகளை அறுவை சிகிச்சை மூலமாக இன்று பெறப்பட்டது.

தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் தேவைப்படும் நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாரிமுத்துவின் உடலுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செவிலியர் கல்லூரி மாணவிகள் மெழுகுவத்தி ஏந்தி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் மூலமாக 5 முதல் 6 நபர்கள் மறுவாழ்வு பெற உள்ளதாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங் தெரிவித்தார்.

x