‘ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை; ஆனால் ஒரே கூட்டணிதான்’ - குழப்பங்களுக்கு தினகரன் முற்றுப்புள்ளி! 


சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை, அது ஏற்பட சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. ஆகையால் ஓரணியில் திரள வேண்டும் என்றே சொல்லிவந்தோம். ஒரு தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் ஓரணியில் ஒற்றைக் குறிக்கோளுடன் திரண்டுள்ளோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நலமுடன் உள்ளேன். இன்னும் 30 ஆண்டுகளாவது அரசியலில் ஈடுபடும் ஆரோக்கியம் இருக்கிறது.

நேற்றைய அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு பற்றிய கேள்விகளோடு வந்துள்ளீர்கள். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த தேஜ கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றே நான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டு வலியுறுத்தி வருகிறேன். அது தான் இப்போது நடக்கிறது.

தேஜ கூட்டணி கடல் அலை போன்றது, நாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேஜ கூட்டணியில் உள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒரே குறிக்கோளோடு செயல்படுகிறோம். இந்தத் தருணத்தில் தேஜ கூட்டணியில் தான் அமமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணிக்கு வந்ததால் அமமுக என்னவாகும்?, ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா? என்பதெல்லாம் வெறும் ஊகங்கள். நாங்கள் எல்லோரும் மோடியின் கரங்களை வலுப்படுத்த அந்தக் கூட்டணிக்குச் சென்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை, அது ஏற்பட சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. ஆகையால் ஓரணியில் திரள வேண்டும் என்றே சொல்லிவந்தோம். ஒரு தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் ஓரணியில் ஒற்றைக் குறிக்கோளுடன் திரண்டுள்ளோம்.

2021-ம் ஆண்டு சரியான கூட்டணி அமைந்திருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. இந்த முறை அமித் ஷா, மோடி அதை சரியாகக் கையாள்வார்கள்” டிடிவி தினகரன் கூறினார்.

x