பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் ஸ்டாலின்; ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!


புதுடெல்லி: தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், தமிழக ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்.

மோதல் போக்கு காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இம்மனுவின் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், “ அரசியல் சாசன பிரிவு 200ன் படி ஆளுநருக்கு எந்த மாதிரியான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவர் பிரிவு 200ன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை வெகு விரைவாக பின்பற்ற வேண்டும்.

முழுமையான வீட்டோ அல்லது பாக்கெட் வீட்டோ என்ற கருத்து அரசியலமைப்பில் இடம் பெறவில்லை. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும், அது அவரது கடமை.

ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.

இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட மசோதா முன்பே சமர்பிக்கப்பட்ட மசோதாவை விட வேறுபட்டால் மட்டுமே விதிவிலக்காக கருத முடியும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்தால் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்

மாநில அரசின் ஆலோசனைக்கு மாறாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நிறுத்தி வைத்தால், ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

ஆளுநருக்குக் தனது விருப்ப உரிமையை செயல்படுத்த முடியாது அதற்கு அரசியலமைபு இடமளிக்கவில்லை. ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அது அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்.

10 மசோதாக்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியலமைப்பு 200ன் கீழ் ஆளுநரின் முடிவு என்பது நீநிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே. மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசு தலைவர் பரிசீலிக்க ஒதுக்குவது சட்டவிரோதமானது. மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது.

2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம். ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஆளுநர் செயல்பாட்டில் நேர்மை இல்லை, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் ” என நீதிபதிகள் தெரிவித்தனர்

இதனையடுத்து தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டத்திருத்த மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால், ஆளுநருக்கு பதிலாக இனி மாநில முதலமைச்சரான மு.க.ஸ்டாலினே பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார்.

x