பூவரசு, வேம்பு, புளிய மரம்... காற்று மாசுவை தாங்கி வளரும் 10 மரங்கள் இதுதான்!


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தனது ஆராய்ச்சியில் வாகன புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று மாசுவை தாங்கி வளரும் மரங்களை கண்டறிந்துள்ளது.

தமிழகத்தின் இரண்டாவது தொழில் கேந்திரமாக கோவை மாநகரம் உள்ளது. இங்கு அதிகரித்துவரும் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் காரணமாக காற்று மற்றும் ஒலி மாசு அதிகரித்து வருகிறது. காற்று மற்றும் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்துவதில் மரங்கள் இயற்கை அரணாக விளங்குகின்றன.

வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மற்றும் வனக் கல்லூரி ஆகியவை இணைந்து காற்று மாசுவை தாங்கி வளரக் கூடிய மரங்களை கண்டறிந்துள்ளன.

இது குறித்து, சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் பிரசாந்த் ராஜன் கூறியதாவது: பெருநகரங்களில் வசிக்கும் மக்களை காற்று மாசுவில் இருந்து காப்பதில் மரங்களுக்கு முக்கியப்பங்கு உள்ளது. அந்தவகையில், காற்று மாசுவை தாங்கி வளரும் மரங்கள் குறித்து கடந்த 2017 முதல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தோம்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி, தடாகம், மதுக்கரை, ஆர்.எஸ்.புரம், அவிநாசி சாலை ஆகிய பல்வேறு தட்பவெப்ப சூழல் மற்றும் மாசு மிகுந்த பகுதிகளில் இருந்து 38 வகை மரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் மரங்கள் மற்றும் தாவரங்கள் எந்த அளவுக்கு காற்று மாசை தாங்கி வளரும் என்பதை அளவிடும் காற்று மாசு தாங்கும் குறியீடு (ஏபிடிஐ), அதாவது இலையின் பிஎச் அளவு, குளோரோபில், அஸ்கார்பிக் அமிலம், இலைகளில் உள்ள நீரின் அளவு ஆகியவைகளை ஆய்வு செய்தோம்.

ஆய்வில் அரச மரம், நெட்டிலிங்கம், கொடுக்காப்புளி, தூங்கு மூஞ்சி வாகை மரம், பூவரச மரம், வில்வம், புளிய மரம், நீர்க்குமுளி, கொத்து அத்தி, வேம்பு ஆகிய 10 மரங்கள் காற்று மாசுவை தாங்கி வளருபவரை என தெரியவந்துள்ளது. ஏபிடிஐ தர குறியீடு 12 முதல் 30 வரை பண்புகளை அடிப்படையாகக் கொண்ட மரங்கள் காற்று மாசை நன்கு தாங்கி வளரும் என்பது தெரியவந்தது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு மரங்களை நட்டு வருகிறது. காற்று மாசை தாங்கி வளரும் மரங்களை நகர பகுதிகளில் நடவு செய்யும்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமின்றி, மக்களின் உடல் நலத்தையும் பாதுகாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

x