‘எனக்கும் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை’ -  சீமானை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை!


சென்னை: எனக்கும் சீமானுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் அவ்வளவுதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில், மாநில அளவிலான மாபெரும் பேச்சு போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சீமான் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதைவிட போர்க்களத்தில் நிற்கக் கூடிய தளபதியாக என்றும் அண்ணன் பார்க்கிறேன். காரணம் சீமான் தான் எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதிபூண்டு நிலையாக நிலைத்து நிற்கிறார். அந்த கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக களத்தில் நிற்கிறார். உறுதியோடு போர்க்களத்தில் போராடக்கூடிய மாண்பு காரணமாக சீமான் அரசியல் களத்தில் தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

எனக்கும் சீமானுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் அவ்வளவுதான். எப்போதும் சீமானுக்காக நான் குரல்கொடுக்க காரணம், இன்னைக்கு அரசியல் களத்தில் நேர்மையும் நெஞ்சுறுதியும் குறைந்திருக்கிறது. அது இருக்கக்கூடிய தலைவராக சீமான் இருக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து பங்கேற்கும் முதல் மேடையாக இது உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

x