மதுரை: தமிழகத்தில் சாதி ஆதிக்கம் கொடி கட்டி பறப்பது மாநில திமுக அரசுக்கு நல்லதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தினமும் பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் நடடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமை கள் தமிழகத்தில் குறையவில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. சாதிய ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பது தமிழக அரசுக்கு நல்லதல்ல.
பட்டியலின மக்கள் பாதிக்கப்படும்போது முதலில் குரல் கொடுப்பது மார்க்சிஸ்ட் கட்சிதான். சாதி ஏற்ற தாழ்வை ஒழிப்பதில் உறுதியாக இருக்கும் இயக்கத்தை தமிழகத்தில் தொடங்க வேண்டும். சிலர் கம்யூனிஸ்ட்களை குறை சொல் கின்றனர். போராட்டம் என்றால் கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ் ட்கள் என்றால் போராட்டம் என்பதைத் தெரியாதவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களைப் புறந்தள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2 கோடி இளைஞர்கள் எண்ணற்ற திறமைகளுடன் இருக்கிறார்கள். அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். அந்த இளைஞர்கள் வளமான எதிர்காலம் அமைய செங்கொடிக்கு பின்னால் திரள வேண்டும். நாட்டில் எல்லாத் துறையிலும் முதல் மாநிலமாக கேரளம் சாதனை படைத்திருக்கிறது. அதுதான் மார்க்சிஸ்ட் மாடல், பினராயி விஜயன் மாடல், இடது முன்னணி மாடல், இவ்வாறு அவர் பேசினார்.