அரியலூர்: ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை, அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியமன தேர்வை ரத்து செய்வோம் என்றார். ஆனால், ரத்து செய்யாமல், நியமன தேர்வை கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 60 ஆயிரம் பேர், தற்போது பணியின்றி உள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை செயல்படுத்த வில்லை. தமிழகத்தில் ஆறரை லட்சம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளனர். ஆனால், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்காத 4 மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளன.
சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் கோரிக்கை களில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். மே மாதத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தை ஆட்சியாளர்கள் ஆளவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் தால் ஆண்டு வருகின்றனர். இதன் முடிவு தேர்தலின் போது வாக்கு வங்கியில் தெரியவரும் என்றார்.