நீலகிரி: ஊட்டியில் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது. எச்பிஎப் அருகே மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஏற்கெனவே திறக்கப்பட்ட நிலையில், அதன் எதிரே மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில், இந்தியாவிலேயே மலைப் பிரதேசங்களில் 700 படுக்கைகள் கொண்ட முதல் அரசு மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது.
25 ஏக்கர் பரப்பளவில் 8 தனித்துவமான கட்டிடங்களை ஒன்றாக இணைக்கும் மையக் கட்டிடம், அவசர மருத்துவ பிரிவிற்கு தனிக் கட்டிடம், வெளிநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கான கட்டிடங்கள், நான்கு மின் தூக்கிகள் ஆகியவை அமைக்கப்பட்டு, எக்கோ, டிரட்மில் மற்றும் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10 நவீன அறுவை சிகிச்சை அறைகளில் 4 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அறைகளும், மருத்துவ வாயு குழாய் அமைப்பு மற்றும் ஆக்சிஜன் விநியோக மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள், 15 படுக்கைகள் கொண்ட ஈசிஆர்சி 2ம் கட்டிடம் மின்தூக்கி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வகையில் நான்கு பிரிவுகளும் அமைக்கப்பட்டு, இதில் நான்கு மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைவாழ் மக்களிடையே காணப்படும் ரத்தசோகை, சிக்கில் செல் அனீமியா மற்றும் தலசீமியா ஆகிய நிலைப்பாடு களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில், 20 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
இப்புதிய மருத்துவமனை வளாகத்தில் அவசர மற்றும் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளுக்குத் துணையாக அனைத்து வசதிகளும் கொண்ட ரத்த வங்கி, நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவதற்காக தனி சமையலறை, அதிநவீன வசதிகளுடன் தானியங்கி சலவை இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் மற்றும் இஸ்திரி இயந்திரங்கள், தனியான பிரேதக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மருத்துவக் கழிவுகளை சேகரித்து, பாதுகாப்பான முறையில் அகற்றும் பணிகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பான மருத்துவ கழிவு மேலாண்மை மையம் மற்றும் மருத்துவமனை வளாகத்திற்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், 230 மருத்துவர்கள், 330 செவிலியர்கள், 5 முதன்மை மருந்தாளுநர்கள், 13 மருந்தாளுநர்கள், 13 ஆய்வக நுட்புநர்கள், 13 கதிர்வீச்சு நுட்புநர்கள் மற்றும் 5 மருத்துவ பதிவேடு நுட்புநர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.7.52 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ, ரூ.2.18 கோடி மதிப்பிலான சிடிஸ்கேன், ரூ.56 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்ட உயர்தர கதிரியக்க கருவிகள் மற்றும் ரூ.1.74 கோடி மதிப்பிலான இதர மருத்துவ உபகரணங்கள் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளன.