திருப்பூர்: உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டில் உள்ள யுகேசி நகரில் 13 வீதிகள் உள்ளன. இப்பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
தனியார் பள்ளிகள் மூலம் இயக்கப்படும் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள், மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக யுகேசி நகருக்குள் வந்து செல்கின்றன. இது தவிர ஏராளமான இரு சக்கர வாகனங்கள், கார்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாகவும் யுகேசி நகர் உள்ளது. இப்பகுதியில் சாலையின் நடுவே மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதால், பள்ளி வாகனங்கள் உட்பட கனரக வாகனங்கள் எளிதாக சென்று திரும்ப முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து நகராட்சி கவுன்சிலர் அப்துல் கயூம் கூறும்போது, "நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்சினை குறித்து நகராட்சிக்கும், மின்வாரியத் துக்கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் கம்பங்கள் சாலையின் நடுவே உள்ளதால் பொதுப் போக்கு வரத்துக்கு கடுமையாக பாதிக்கிறது. எனவே சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி, சாலையோரமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.