கோவை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சிகள் வென்றிட வேண்டும் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் 72-வது பிறந்த நாள் விழா, 11,072 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் கோவைப்புதூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி வரவேற்றார்.
கூட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளில் மகளிருக்கு அரசு பேருந்துக ளில் கட்டணம் இல்லாத விடியல் பயணத் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டார். இதன்மூலம் ஒரு நாளைக்கு 50 லட்சம் மகளிர் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மகளிர் உரிமை தொகையை 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 4,61,000 மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பெற்று வருகின்றனர்.
காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப் பெண் என பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் ஒரு ஹாக்கி மைதானத்தை வழங்கி இருக்கிறார். விரைவில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வென்றிட வேண்டும். அதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி முதலிடத்தை பெற்று வெற்றி பெற்றது என்ற வரலாற்று சாதனையை உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.