ராமேசுவரம்: இலங்கையிலிருந்து ராமேசுவரம் வரும் வழியில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று காலை அனுராதபுரத்துக்கு வந்தார். அவருக்கு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அந்நாட்டு அமைச்சர்கள் விஜித ஹேரத், வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இலங்கை விமானப் படையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பின்னர், பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவும் அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடு நடத்தினர். பவுத்த துறவிகள் பிரதான சங்கநாயக்க வண, பல்லேகம ஹேமரதன நாயக்க ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, ‘நான் பிறந்த குஜராத்தில் 1960-களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது புத்தரின் நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதை இலங்கையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள புத்த கயாவை ஆன்மிக நகராகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் அனுராதபுரத்தில் மாஹோ - ஓமந்தை இடையேயான தரம் உயர்த்தப்பட்ட ரயில் பாதையை இலங்கை அதிபருடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். மாஹோ - அனுராதபுரம் இடையே ரயில் பாதை மேம்பாட்டுப் பணிக்கு இருவரும் அடிக்கல் நாட்டினர். பின்னர், அனுராதபுரத்திலிருந்து நேற்று காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
இலங்கையிலிருந்து ராமேசுவரம் வரும் வழியில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே உள்ள ராமர் சேது பகுதியை (ராமர் பாலம்) ஹெலிகாப்டரிலிருந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். இதுகுறித்து எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் "இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அயோத்தியில் ராமரின் சூரிய திலக தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ராமர் சேதுவின் தரிசனம் கிடைத்தது. ராமர் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறார். அவரது ஆசீர்வாதம் என்றும் நம் மீது நிலைத்திருக்கப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமேசுவரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்: ராமநவமியையொட்டி ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தரிசனம் செய்தார். ராமநவமியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் “நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ராமநவமி நல் வாழ்த்துகள்.
வலிமையான, வளமான, திறமையான இந்தியாவுக்கு புதிய ஆற்றலை அளிக்கும் பகவான் ஸ்ரீராமரின் பிறந்த நாளின் இந்த மங்களகரமான நிகழ்வு உங்கள் வாழ்வில் புதிய உணர்வையும், புது உற்சாகத்தையும் கொண்டு வரட்டும். ஜெய் ஸ்ரீராம்’ என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்துவைத்த பின்னர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு பிரதமர் சென்றார்.
காரில் வந்த பிரதமருக்கு பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரத்தில் சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். ராமேசுவரம் கோயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சந்நிதிகளில் தரிசனம் செய்த பிரதமர், பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தார். முன்னதாக பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரம் கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.