சென்னை: தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்கி உள்ள பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயலாகும்’ என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை பேரிடர் தாக்குதலால் பல்லாயிரம் கோடி பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெஞ்சல் புயல், பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர் வரையான இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்பு செய்யவும் ரூ.37 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான பேரிடர் நிவாரண நிதி மற்றும் பேரிடர் துயர் தணிப்பு நிதி தேவை என தமிழக அரசு, மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் மத்திய அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு செல்கின்றனர். அப்போதெல்லாம் மத்திய அரசு பெரும் உதவி செய்யும் என்று உறுதி அளித்துச் செல்கின்றனர். தொடர்ந்து மத்திய அரசின் பல்துறை உயர் அலுவலர்கள் கொண்ட குழுக்களை அனுப்பி, கள ஆய்வும், அதிகாரிகள் மற்றும் அரசு மட்ட விசாரணைகளும் மேற்கொண்டு, மத்திய அரசுக்கு அறிக்கைகளை பெற்று வருகின்றது.
அரசியல் ஆதாயம்: ஆனால், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால், குளிப்பாட்ட தண்ணீர் தருவது போல் மிக நீண்ட கால தாமதத்துக்கு பிறகு சொற்ப தொகையை ஒதுக்கீடு செய்து, ஒப்புதல் வழங்கும் நிர்வாக நடவடிக்கையை கூட, பெரிய அளவில் விளம்பரம் செய்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழகத்துக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ 522.34 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது, தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியில் 1.5 சதவீதம் கூட இல்லை. மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு “சோளப்பொறி போட்டு, யானைப்பசியை போக்கும்” முயற்சியாகும். எனவே, தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை முழு அளவில் வழங்கி உதவ வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.