வேளாண் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி


சென்னை: வேளாண் துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரம் 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக்கூடியதுதான் என்றாலும், வேளாண் துறையின் வளர்ச்சி 0.15 சதவீதமாக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

அடிப்படையில் வேளாண்மையை சார்ந்த மாநிலமான தமிழகம், விவசாயிகள் முன்னேறாமல் முன்னேற முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தும், வேளாண் வளர்ச்சிக்கான முன்னோக்கு நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. சேவைத் துறை வளர்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மட்டுமே கருத்தில்கொண்டு, ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சியை அடைந்து விட்டதாக கருத முடியாது.

வேளாண் துறை முன்னேற ஆண்டுக்கு சராரியாக 4 சதவீத வளர்ச்சி எட்டப்படவேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். அதை இலக்கு வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லுக்கான கொள்முதல் விதையை குண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5 ஆயிரம் உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இடுபொருள் மானியம் வழங்க வேண்டும். வேளாண் துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

அனைத்து விளை பொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.விளை பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதன கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x