பணம் செலுத்தும் கருவி பழுதால் மீன்பிடி படகு டீசலுக்கு பணம் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி


கோப்புப் படம்

சென்னை: காசிமேட்டில் மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படும் டீசலுக்கு உரிய பணத்தை மின்னணு முறையில் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சினைக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் பீ.ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் , சுமார் 1,500-க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளும், மத்திய, மாநில அரசுகள் வழங்கக் கூடிய டீசலை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் டீசல் பிடிக்க செல்லக்கூடிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தில், மீனவர்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளைக் கொண்டு ஏடிஎம் டெபிட் கார்டு, ஜிபே, கூகுள் பே போன்றவற்றை பயன்படுத்தி டீசல் பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் ஸ்வைப்பிங் மெஷின் பழுதாகி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளது.

இதனால், மீனவர்கள் தங்களது மின்னணு வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், கடந்த ஒரு மாதமாக மீனவர்களுடைய கோடிக்கணக்கான பணம் கையில் வாங்குவதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடக்க இதில் வாய்ப்பு உள்ளதோ? என்று சந்தேகம் ஏற்படுகிறது.

எனவே, தமிழக மீன்வளத் துறை அமைச்சர், மீன்வளத் துறை செயலாளர், ஆணையர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தினுடைய பொது மேலாளர் ஆகியோர் இதுதொடர்பாக உரிய ஆய்வு செய்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x